கண்ணுக்குள் நீ...(தேன்கூடு - போட்டி)



யோசித்து யோசித்தே தயங்கியபடியே அதைச்சொன்னாள் ரேவதி உமாவிடம்.
"சுந்தரியை நாளை இங்கே அழைத்து வருகிறார்கள்"

சுந்தரியின் கணவன் மாரடைப்பில் காலமாகிவிட்டான். காரியங்கள் முடிந்ததும் அவளை இங்கே
அழைத்து வருகிறார்கள்.

உமா மோட்டு வளையைப் பார்த்து அமர்ந்திருந்தாள். அசைவில்லை அவளிடம்.

*

சுந்தரியும் உமாவும் ஒரே பள்ளியில், ஒரே கல்லூரியில் படித்த பக்கத்து பக்கத்து வீட்டு பால்ய
சிநேகிதிகள். சுந்த்ரிக்கு கணேஷும், உமாவுக்கு அபிநயாவும் ஒரே நாளில் ஒரே
மருத்துவமனையில் ஒரு மணிநேர வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இருவரும் இப்போது ஒரே
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கின்றனர்.

*
உமாவின் மகனைப் பார்க்க வந்திருந்தாள் சுந்தரி.
"அம்மா எனக்கும் இது மாதிரி ஒரு தம்பிப்பாப்பா வேணும்மா. பார் அபி மட்டும் தம்பியிடம்
விளையாடுவாளா? எனக்கும் தம்பி வேணும்மா. நானும் விளையாடணும்"

அதிர்ந்து திரும்பிய உமா " அபி கணேஷுடன் போய் விளையாடு" என்று அனுப்பி வைத்தாள்.

" உமா. அவனுக்கு எதுவும் தெரியாது. நீ மனசில் வெச்சுக்காதே"
" இல்லை சுந்தரி. இதில் என்ன இருக்கிறது. குழந்தை தானே. அபிக்கும் இன்னும் எதுவும்
தெரியாது. வளர்ந்தவுடன் புரிந்து கொள்வார்கள்"

தினேஷ் இன்னும் தூங்கி எழுந்திருக்கவில்லை. நார்மல் குழந்தையாகத்தான் தெரிந்தான்.

" டாக்டர் என்ன சொன்னார்"
" முதல் கேள்வி சொந்தத்தில் திருமணம் செய்தீர்களா என்று தான் கேட்டார். ஏன்னா நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்பவர்களின் குழந்தை இப்படி பிறக்க வாய்ப்பிருக்கிறதாம்.பிறகு கீழே விழுந்தானா என்று கேட்டார்கள். என்ன காரணம் என்று பிடிபடவில்லை.எல்லா டெஸ்ட் டும் செய்தாகி விட்டது. வேறு வழியில்லை. சரிசெய்ய முடியாது சுந்தரி"

சோகையாக சிரித்தாள் உமா. சுந்தரி உமாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள்.
கைகள் கோர்த்துக் கொண்டிருந்த தோழிகள் குளிர்ச்சியையும், வெம்மையையும் உணர்ந்தனர்.

தினேஷிடம் சின்ன அசைவு. உடனே ஓடினாள் உமா. மல்லாக்கப் படுத்திருந்த தினேஷ்் மேலே பார்த்தபடி சிரித்தான் . கைகள் உயரே தூக்கினான். விழிகள் வெறித்தபடி இருக்க தூக்கிய கைகளின் விரல்கள் காற்றில் அலைய ஆரம்பித்தன.

முகம் சற்றே சுருங்க மூச்சு கொஞ்சம் திணறியது. சளி மூக்கில் ஒழுகியது. மலம், சிறுநீர்
கழித்திருந்தான். முகம், உடல் துடைத்து உடை மாற்றி விட்டாள் உமா.

"அப்ப வேலை ?"
" வேலையை ரிசைன் செயதிட்டேன் சுந்தரி"
" படிப்பு?"
" அதையும் விட்டுடப் போகிறேன். என்னால் படிச்சு எழுத முடியும்னு தோணலை."
" உமா. இன்னும் ஏழு மாதம் இருக்கு. மேயில் தானே பரீட்சை. வேலையை தான் விட்டாச்சுன்னு வெச்சுக்க.வீட்டில் இருந்தபடி படிப்பையாவது முடிச்சிடு உமா"

அபியும், கணேஷும் ஓடி வந்தனர்.
"என்னம்மா விளையாடியாச்சா"
" அம்மா நான் டாக்டருக்குப் படிக்கப் போறேன்"
" ஏண்டா செல்லம்"
" அப்ப தான் தினேஷுக்கு சரி செய்யலாம். தினமும் அபி அம்மா தினேஷோட ஹாஸ்பிடல்
போறாங்களாம். அபி சொன்னாள்"
" கணேஷ் நான் தாண்டா டாக்டருக்குப் படிக்கப் போறேன்"
"ரெண்டு பேருமே படிக்கலாம். வாங்க முதல்ல சாப்பிடுங்க. சாப்பிட்டாதான் நல்லா படிக்கலாம்"

*
"உமா. உன்னைப் பார்க்காம என்னல் இருக்க முடியாது. கண்ணுக்குள்ளே நீ தான் இருப்பே"

"சுந்தரி இதென்ன சின்னக் குழந்தை மாதிரி பேச்சு. பஸ் ஏறினா ஒருமணி நேரத்தில வந்திடலாம்.இந்த ஒரு வருடம் தானே. பிறகு எப்போதும் போல் இங்கே தானே இருப்பாய்"

"என்னை மறந்திட மாட்டாயே"

" என்ன சுந்தரி இது. நானா? உன்னை மறப்பதா. இன்னும் பள்ளியில படிச்சிட்டிருக்கிறவங்க

இல்லை நாம. நம்ம குழந்தைங்க கல்லூரியில் படிக்கிறாங்க நினைவிருக்கட்டும்?"
கைகள் கோர்த்துக் கொண்டிருந்த தோழிகள் குளிர்ச்சியையும், வெம்மையையும் உணர்ந்தனர்.

ம்ரூம் ம்ரூம் ம்ரூம்
எழுந்தாள் உமா. உமாவின் தோள் ஒரு பக்கம் சாய்ந்திருந்தது. நடை ஒரு பக்கமாக நடந்தாள்.
சத்தம் அதிகரிக்க தினேஷின் குரல் என்று தெரிந்தது. வளர்ந்த குழந்தையாய் படுத்துக்
கிடந்தான். கால் ஒன்று சுவரிலும் மற்றொரு கால், சுவரிலிருந்த காலின் மேலும். கைகள் மேலே
தூக்கி இருக்க விரல்கள் காற்றில் அசைந்தபடி. கர் கர் என்று சத்தம் அதிகமாகியது. நெஞ்சு
ஏறி ஏறி இறங்க உள்ளே அடைத்திருந்த சளியின் வீரியம் தெரிந்தது.

" தினேஷ். யார் வந்திருக்கிறாங்க பார்"

" தினேஷ் என்னைத் தெரியுதாம்மா. சுந்தரி அத்தை வந்திருக்கிறேன் பார்."
காலகளை் கீழே இறக்கினான்.காலில் திறமில்லை. விழிகள் மிரள, ஓரிடத்தில் நில்லாது கண்மணிகள் சுற்றின.
ஒரு நொடி சுந்தரியின் விழியினை நோக்க, அந்தக் கணம் தினேஷ் சிரிப்பது போலிருந்தது. முகம், உடல் எல்லாமே உடல்,மன வலிவற்ற குழந்தை என்பதை பார்த்த உடன் தெரியக் காட்டி
யது.

" இன்னும் ஆயுர்வேதம், ஹோமியோபதி, பிறகு ஒரு சாமியார் வந்தார் எல்லோரிடமும் தூக்கிச்
சென்று காட்டினேன் சுந்தரி. கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை.
மறுபடியும் டாக்டரிடம் அழைத்துப் போகிறேன்."

" எப்படி இருக்கிறான் உமா. டாக்டர் என்ன சொல்கிறார்?"

" இப்படி இருந்தாலும் பரவாயில்லை சுந்தரி. சாப்பாடு மட்டும் சாப்பிட்டால் தோணாது. சளியால்
அதிகம் அவஸ்தைப்படுகிறான். அதிலிருந்து அவனுக்கு கொஞ்சம் ரிலீப் கிடைத்தால் போதும்"

விழிகள் சுழல ஆரம்பிக்க நெஞ்சு புடைக்க சத்தம் அதிகரித்தது. மூக்கில் கெட்டியாக வெளிர்
பச்சை நிறத்தில் சளி அடைத்துக் கொண்டது. சளியை எடுக்க சிரமப்பட்டாள் உமா. தினேஷை
லேசாகத் தூக்கி தன் மேல் சாய்த்துக் கோண்டாள். அவளின் ஒல்லியான தேகத்தால் தினேஷைத் தூக்க இயலவில்லை. தள்ளாடினாள். இதனால் தான் அவள் தோள் ஒரு பக்கமாய் சாய்ந்துள்ளது போலிருக்கிறது. நடையும் ஒருபக்கமாய் நடப்பது போலுள்ளது.
சுத்தம் செய்து விட்டு வந்தாள். தாய் தன்னை தூக்குவது, தன்னை கண்போல காப்பது,
தன்னுடைய நிலைக்கு வருந்துவது எதுவும் தினேஷுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை.
பரப்பிரம்மமாய் இருந்தான். கடவுளுக்கு அபிஷேகம் செய்வதாய், உணவு படைப்பதாய் உமா
தினேஷைக் கவனித்துக் கொண்டாள்.

சுந்தரி விழிகளில் நீர் வழிய உமாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வேகமாக கண்களைத்
துடைத்துக் கொண்டு உமாவை அணைத்து விடை பெற்றாள்.

" உமா ஒரு வருடமாகும் நான் வருவதற்கு. உன்னைச் சந்திக்கும் ஆவலில் வருவேன். நான்
வந்தது தெரிந்ததும் நீ தான் என்னைப் பார்க்க வரணும் சரியா"
" நானே உன்னைப் பார்க்க வருவேன் சுந்தரி"

*
யாரும் எதிர்பார்க்காத ஒரு நாள். தொடர்ந்து மழை பெய்து அன்று தான் ஓய்ந்திருந்தது.
சும்மாவே தினேஷுக்கு சளிபிடிக்கும். இதில் மழை என்று படுத்தல் வேறு.
மழை எப்போது நிற்குமோ என்றாகி விட்டது. மழையைப் பார்த்து ரசித்த நாட்கள் என்ன ஆயிற்று.மழையில் நனைந்து நனைந்து ரசித்த நாட்கள் எங்கே சென்றன.

உள்ளே சென்றதும் தினேஷ் தன்னை அழைப்பதைப் போல் இருந்தது. அருகில் சென்றால் உமா.

"என்ன தினேஷ். அபியைப் பார்க்கப் போகணும். வரச் சொல்கிறாள். ஒரு நாள் போய்வரவா?"

தினேஷ் தலையாட்டினான்.
தினேஷா தலையாட்டுகிறானா?

முகத்தையே பார்த்தாள்.
சிரிக்கிறானா?

விழிகள் ஒரே பார்வையாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" தினேஷ். இன்னிக்கு உன்னை அம்மா வெளியே ரிக்ஷாவில் அழைத்துப் போகிறேன் சரியா?
மழைன்னு தான் வெளியே அம்மா கூட்டிட்டுப் போகலை. மழை விட்டதும் போகலாம்"

தினேஷின் மார்பில் படபடவென அதிர்வு தெரிந்தது. சளியின் சத்தம் அதிகரித்தது. கையும் காலும் இழுத்துக் கொண்டன. மறுபடியும் பிட்ஸா? வலிப்பு வந்தால் டாக்டர் அளித்த மருந்து தர
வேண்டுமோ. இல்லை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று விடலாம்.

அதிர்வு சற்றே நின்றது. தூக்கத்தில் கிடப்பது போல் கிடந்தான் தினேஷ்.
சிறிது நேரம் கழித்து போகலாம் என்று அவன் அருகிலேயே படுத்தாள்.
ஒரு வாரத்தூக்கமின்மை, உணவு சரியான நேரத்தில் உண்ணாதது கண் அயரச்செய்தது.

கடுமையான நாற்றம் வயிற்றைப் புரட்ட திடுக்கிட்டெழுந்தாள் உமா.
தினேஷைச் சுத்தம் செய்தாள். மெதுவாகத் தொட்ட உணர்வு தெரிய திரும்பினாள். தினேஷ் தான்.

"தினேஷ் பாரும்மா. அம்மாவைத் தெரிகிறாதா"

சிரித்தான்.

" தினேஷ். அபி பரீட்சை முடிந்ததும் வந்து விடுவாள். இந்த லீவ் பூராவும் உன்னுடன் தான்
இருப்பாளாம். உனக்கு கதை சொல்வாளாம்."

தலையசைத்தான் தினேஷ். ஒரு கணம் தான்.
கைகளை உயரத்தூக்கி விரல்கள் காற்றில் அலைய ஆரம்பிக்க விழிகள் மேல் நோக்கி சுழல
ஆரம்பித்தன.

"தினேஷ்"
"தினேஷ்"
"தினேஷ்"

அழைக்க அழைக்க பதிலில்லை.
தொட்டாள். அனலாய் கொதித்தது தினேஷின் உடல். நெஞ்சு ஏறி இறங்க சளியின் தீவிர சத்தம்
அதிகரித்தது. போன் செய்து ஆட்டோவுக்கு சொல்ல எழுந்தாள் உமா.

நீண்டு கிடந்த தினேஷின் உடல் அஷ்டகோணலாய் அதிர ஆரம்பித்தது. எம்பி எம்பி உடல் விழ கை கால்கள் இழுத்துக் கொள்ள ஒரு கணத்தில் உடல் அசைவற்று விழ, விழி குத்திட்டு நின்றது.

"தினேஷ்"

உமாவின் ஒரே ஒரு கதறல். பிறகு அவள் பேசவில்லை. வீதி ஜனங்கள், உறவுகள் எல்லாம்
வந்தனர்.

"உமா அழுதுவிடம்மா. அப்ப தான் சரியாகும்."

" நல்ல குழந்தைங்க வச்சிருக்கிற நாங்களே பொறுமை இல்லாம குழந்தைங்கள அடிச்சிருக்கிறோம். நீ அவன் இருக்கிற வரைக்கும் நன்றாகத்தானே பார்த்தாயம்மா."

" பாரேன் போறப்ப எவ்வளாவு சுத்தமா போயிருக்கிறான் உன் பையன்"

" அவனோட அந்த சட்டை பெட்ஷீட் எல்லாம் போட்டு விடுங்க"

எதற்கும் அசைவில்லை உமாவிடம்.

குளிப்பாட்டி, மாலை அணிவித்து தொட்டு வணங்கி வந்து சேர்ந்தவள் தான்.
*
இரண்டு மாதங்களாகின்றன தினேஷ் மறைந்து. இன்று சுந்தரி நாளை வருவதாய் தகவல்.
இருவருக்கும் மரண இழப்பு. மகன், கணவன் என
*
"சுந்தரி"
" உமா"
ஓ வென்று அழுதாள் சுந்தரி
உமா சுந்தரியின் கைகளைப் பிடித்தாள். சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்

சுந்தரி.குளுமையும், வெம்மையும் உணர்ந்தனர்.

" உமா .சொன்னபடி என்னைப் பார்க்க வந்தாயா. இவர்... இவர்... என்னை... இனி எப்படி..."
அழுது கொண்டே பேசினாள் சுந்தரி.
" சுந்தரி. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்"
" உமா என்னால் தாங்க இயலவில்லை, நீ எப்படிம்மா..."
" சுந்தரி. அம்மா அக்கா அபிநயாவைப் பார்க்க போகட்டுமென்று சம்மதம் கொடுத்துட்டானா
தினேஷ். என்னைப் பார்த்து சிரித்தான். அக்காவிடம் கதை கேட்க சம்மதிச்சு தலையசைத்தான்
சுந்தரி. கண்ணுக்குள்ளேயே இருக்கிறான்.எப்படி எப்படி இனிமே நான்"

மடை திறந்த வெள்ளமாய் பேச ஆரம்பித்தாள் உமா விழிகள் பொங்கப் பொங்க .
இரண்டு மாதங்கள் கடந்த பின்பு விழிகள் வலியினைக் கொட்ட ஆரம்பிக்கின்றன.

சுந்தரி உமாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள். மரணத்தின் பாஷை உணர்ந்த
இருவரின் கண்ணீரும் இருவரின் கரங்களையும் நனைத்துக் கொண்டிருந்தன.


7  மறுமொழிகள்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மது
அன்புடன்
ராகுல்

posted by: rahul2000  
நன்றி ராகுல்
பெரிய மனசு தான் உங்களுக்கு  
பெயர்கள் நிறைய. முதல் முறை படிக்கும் போது குழப்பம். இரண்டாவது முறை படிக்க வேண்டியிருந்தது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலும் நல்ல முயற்சி.

அன்புடன்,

மா சிவகுமார்


posted by: மா சிவகுமார  
பயிற்சியாக நினைத்தே போட்டியில் கலந்து கொண்டு எழுதினேன்.

நன்றி மா.சிவகுமார்  
அக்கா,

கொஞ்சம் வெட்டி வெட்டி வந்தா மாதிரி ஒரு எண்ணம். அதுவும் அந்த கடைசி உரையாடல் சரியா வரலை.

என்னடா இவன் குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கறானேன்னு நினைக்காதீங்க. நல்லது எல்லாரும் சொல்லுவாங்க.



posted by: இ.கொ.  
நன்றி இலவசம்
இப்படி கொத்தினால் சரிப்படும்

நல்லது கேட்க காத்திருக்கிறோம் இ.கொ  
வாக்களித்த ஒன்பது பேருக்கும் மனமார்ந்த நன்றிங்க  

Post a Comment