32 கேள்விகளா ?????



தம்பி இரவிசங்கர்கண்ணபிரான் அழைத்த நேரம் தொடர்பணி. ஆரம்பத்தில் எழுத விருப்பமில்லை. ஆனாலும் அன்பான அழைப்பினை மீற இயலவில்லை. எழுத உட்கார்ந்துவிட்டேன்.

எழுத ஆரம்பிக்கையில் தோன்றியது: சில சமயங்களில் இதுபோன்ற விளையாட்டும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அழைப்புக்கு நன்றி இரவி.

கமலே இவங்க நாவலைத்தான் படிக்கிறாங்கன்னு எழுதியது ரொம்ம்ம்ம்ப ஓவரு. இந்த மண்டை காய்கிற வெயிலிலும் குளிர் ஜூரமாயிடுச்சு:) ஆனாலும் இதோ கண்ணு கலங்க சமாளிச்சுக்கறேன் தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்னு.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எனக்கு பெற்றோர் வைத்த பெயர் மஞ்சு. எனது தந்தையின் தாயாரின் பெயர் மஞ்சம்மாள். பாட்டியின் பெயர் பேத்திக்கு என்னும் வகையில் எனக்கு இந்தப் பெயரை வைத்திருக்கலாம். எல் கே ஜி வகுப்பில் என்னைச் சேர்க்க அழைத்துச் சென்றபோது அட்மிஷன் சமயத்தில் அங்கே பெயர் என்ன என்று கேட்டபோது மஞ்சுளாதேவி என்று சொன்னேனாம். எனக்கு நினைவில் இல்லை. அதனால் பள்ளியில் அந்தப் பெயரிலேயே சேர்த்திருக்கிறார்கள். எல்லா ரெகார்டும் இந்தப் பெயரில்தான் இருக்கிறது.

எழுத ஆரம்பித்தபோது மஞ்சு ரெங்கனாதன் என்னும் பெயரில் எழுத ஆரம்பித்தேன். என்னுடைய பெயரை ஏன் போடுகிறாய் என்று கணவர் ஒருமுறை சொல்லிவிட்டார். அதனால் கவிதை எழுத ஆரம்பித்தபோது வேறுபெயரில் எழுத முடிவு செய்திருந்தேன். எனது மெயில் ஐடி மதுமிதா என்னும் பெயரில் ஆரம்பித்திருந்தேன். கணவரின் நண்பரின் மகள் ஆரம்பித்துக்கொடுத்தார். திடுமென பெயர் கேட்டதும் எதுவும் தோன்றவில்லை. பலபெயர்களை அவள் கூறுகையில் மதுமிதா என வைக்கலாம் என்று முடிவு செய்தோம். சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாயகியின் பெயர் மதுமிதா. எனக்கும் பிடித்த பெயர் என்பதால் சரி என்று சொல்லிவிட்டேன்.

திசைகள் இதழில் ஒரு கட்டுரை எழுதுகையில் மது என்ற பெயரில் எழுதி அனுப்பியிருந்தேன். மாலன் அவர்கள் ஏன் மது என்று எழுதுகிறீர்கள். ஐடியில் மதுமிதா என இருக்கிறது. அது நன்றாகத்தானே இருக்கிறது என்று அந்தப்பெயரிலேயே இளம்பிறையின் நூல் வெளியீடு நிகழ்ச்சிக் கட்டுரையினை வெளியிட்டுவிட்டார். தொடர்ந்து அந்தப் பெயரிலேயே எழுதி வருகிறேன்.

மஞ்சு, மது, மதுமிதா என அவரவர்களுக்கு பிடித்த பெயரில் அழைப்பார்கள். எப்படி அழைத்தாலும் எனக்கு பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?
சரியாக நினைவிலில்லை. அழுகை என்பது மரத்துப்போயிருக்க வேண்டும். வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கும். முன்பு நிறுத்திப்பிடித்து நன்றாக எழுதுவேன். ஒன்பது வருடங்களாக அதிகம் பேனா உபயோகித்து எழுதுவதில்லையாதலால் இப்போது எழுதுவது நன்றாக இல்லை என நினைக்கிறேன்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
வீட்டில் நானே சமைக்கும் எந்த உணவும் பிடிக்கும். இதுதான் பிடிக்கும் என்று தனிப்பட்ட விருப்பம் இல்லை.

சாதம், பருப்பு, சாம்பார், ரசம், வத்தக்குழம்பு, கறி, பொரியல், தயிர் என்று இருந்தாலும் பிடிக்கும். ஆனால், நம்புங்க கொஞ்சமாதான் சாப்பிடுவேன்.

வெறும் தயிர்சாதம் மட்டும் இருந்தாலும் பிடிக்கும்.

எதுவுமே சாப்பிடாமல் ஏதாவது ஒருவகை சுண்டல் மட்டும் சாப்பிட்டுவிட்டு, பழச்சாறு குடிக்க பிடிக்கும்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
பார்த்தவுடன் அனைவரிடமும் சுமுகமாகப் பேசிவிடுவேன். எல்லோரையும் நட்பாகத்தான் கருதுவேன். நாம் நேசிப்பவர்களுக்கும் பிறர் நம்மை நட்பாகக்கருதுவதற்கும் இருக்கும் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள பலவருஷங்கள் ஆகிப்போச்சு. காலம் நட்பு என்பதற்கு தனி அர்த்தம் கற்பித்திருக்கிறது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
ஓடும் நீரில் குளிக்கப் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
முகம்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
எல்லோரையும் இப்போதுகூட பார்த்த உடனே நம்பி நேசித்துவிடுவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ரொம்ப பெர்பெக்ஷன்.

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
வருத்தம் இல்லாமல் இருக்க பழகிவிட்டது.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பில் வெளிர்தேன்நிறம் தெளிக்கப்பட்ட ஆடை.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
மடிக்கணினியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விசிறி (Fan) சுற்றும் சத்தம் மட்டும் கேட்கிறது. இதற்கு இடையே பதிவு போஸ்ட் செய்வதற்கு முன்னால், கீழே பக்கத்துவீட்டில் அடிபம்பு அடிக்கும் ஓசை. இந்த நேரத்திலா. பாவம் அந்தப் பெண்மணி என எண்ணம் ஓடுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்.
ஆமாம். ஏன் பேனாவாக மாற்ற வேண்டும்?

14. பிடித்த மணம்?
மனோரஞ்சித மணம், பன்னீர் பூ வாசம், மழைத்தூறலில் எழும் மண் வாசனை, சமைக்கும்போது தாளிச்சுக்கொட்டுகிற வாசனை..........

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் பதிவுகளே இப்போதைக்குள் வாசிக்கவில்லை. அழைத்தால் யாருக்குப் பிடிக்கும் என்பதும் தெரியவில்லை. 27 ஆம் கேள்விக்கான பதிலும் ஒரு காரணம். யார் 32 இனை எழுதியிருக்கிறார்கள் யார் எழுதவில்லை என்பதே தெரியவில்லை என்பதால் இந்தப் பதிவினை வாசிக்கும் 32 கேள்விகளை எழுதாத பதிவர்கள் எழுதலாம் என அன்புடன் கூறி முடிக்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பல முக்கிய பதிவுகள் இருக்கின்றன. ஆனாலும் கொஞ்சம் விளையாட்டான இந்தப்பதிவினைக் குறிப்பிடத் தோன்றியது.

சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!

17. பிடித்த விளையாட்டு?
இப்போது எதுவும் விளையாடவில்லை. ஓட்டம் பிடிக்கும். (இதுவும் விளையாட்டுதானே?)

தொலைக்காட்சியில் பார்க்க என்றால் டென்னிஸ். ஜிம்னாஸ்டிக்ஸ். இதுவும் இப்போது பார்க்கும் தருணங்களும் குறைவு.

18. கண்ணாடி அணிபவரா?
ஆம். புத்தகம் வாசிக்கையில் மட்டும்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
உண்மையாக என்னை உணரச்செய்யும் திரைப்படம் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
யாவரும் நலம்.

நான் தான் நலமில்லாமல் போய்விட்டேன். கதைக்களம், கரு, சஸ்பென்ஸ் கலையாமல் நகர்த்திச் சென்ற பாணி எல்லாம் வித்தியாசமான புதுமைதான். ஆனால், தொலைக்காட்சியிலும் அடுத்ததாய் கடைசியில் செல்லிலும் வரும் என்ற ஆவிகளின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சொல்லப்படும்போது எரிச்சலைக் கொடுத்தது.

21. பிடித்த பருவ காலம் எது?
எல்லாகாலமுமே அதனதன் தனித்துவத்துடன் பிடிக்கும்.

சொல்லியே ஆகணுமென்றால் வசந்தகாலம்.

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
My Story - Kamaladas

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நான் எப்போதுமே மாற்றியதில்லை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ஏகாந்தமாய் இருக்கையில் சின்னதாய் தொலைவில் கேட்கும் பறவைகளின் ஒலி, மெல்லிய இசை, கடல் அலை ஓசை, வருடிச் செல்லும் காற்றின் 'விர்ர்ர்ர்ர்' என்னும் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன சத்தம் பிடிக்கும்.

பலத்த சத்தங்கள் செவிக்கு அலர்ஜி. இரைச்சலாய் இருக்கும் எந்த சத்தமும், வெடிகுண்டு வெடித்தல், ஒலிபெருக்கி அலறும் சத்தம் பிடிக்காது.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
பெங்களூரு, கொச்சி, திருப்பதி.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்க வேண்டும்தான். அதை மற்றவர்தான் சொல்லவேண்டும்.

நடந்த மனவருத்தம் தரும் நிகழ்வுகளை உடனே சுமப்பதை நிறுத்தி, நினைவில் கொள்ளாது, அடுத்து ஏதேனும் பணி செய்வது. ஆனாலும் அப்படிப்பட்ட நிகழ்வு குறித்து இன்னொருமுறை பேச நேர்கையில் அதே உணர்வுக்கு வந்துவிடுவது. (இது தனித்திறமையா என இன்னொரு கேள்வி கேட்கவேண்டாம்:))))) )

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிறரைத் துன்புறுத்துவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
யோசித்தல்
உள்ளுக்குள் எழும் தொடர்கேள்விகள்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பூமி, பிரபஞ்சவெளிப்பாதை:)

30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எந்த சூழலிலும் நிதானம் தவறாமல் இருக்கவேண்டும். குழந்தைத்தனமும் மாறிவிடக்கூடாது.

31. மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் என்று இருக்கணுமோ?

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்க்கை ஒரு புதிர் நிறைந்த விளையாட்டு விளையாடியே ஆகவேண்டும் என்பதால் அதை அப்படியே ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்கையில் மகிழ்ச்சியைத் தொலைத்துவிடாமல் இருக்கவும் பழகிக்கொள்ளவேண்டும்.


மாதத்திற்கு 30 இல்லையென்றால் 31 நாட்கள் மட்டுமே இருக்கிறதே. ஏன் 32 நாட்கள் இல்லையென்று யோசித்த நாட்கள் நினைவுக்கு வந்ததே. வந்ததே. வந்ததே :)))))

Labels:



13  மறுமொழிகள்

//மதுமிதா said...
http://madhumithaa.blogspot.com/2009/06/32.html//

அக்கா
விடிகாலை மணி 03:00
தூங்காம பதிவு எழுதிக்கிட்டு இருக்கீங்களா? உங்க பேரு மதுமிதா தானே! மூனு மணிக்கே துயில் கலைய வேங்கடமிதா இல்லையே? :)

//கமலே இவங்க நாவலைத்தான் படிக்கிறாங்கன்னு எழுதியது ரொம்ம்ம்ம்ப ஓவரு//

ஏன்-க்கா? கமல்-ன்னு சொன்னது தப்பா? டாம் ஹாங்க்ஸ்-ன்னு சொல்லி இருக்கனுமோ? :)

//இந்த மண்டை காய்கிற வெயிலிலும் குளிர் ஜூரமாயிடுச்சு:)//

ஓ...Take care ka!

//ஆனாலும் இதோ கண்ணு கலங்க சமாளிச்சுக்கறேன் தம்பியுடையாள் எதற்கும் அஞ்சாள்னு//

ஹா ஹா ஹா! கவலையை விடுங்க! அடிக்கற கும்மிய நாங்க அடிச்சிக்கிறோம்! நீங்க போய் தூங்குங்க! :)  
இல்லை இரவி இப்போ மணி 4.15

தூங்குனாதானே ராசா துயில் கலைந்து முழிச்சுக்கிறதுக்கு:( :)))))  
நாவலைப் படிக்கிறாங்கன்னு சொன்னது இரவி.

ஒன்லைனரா எழுதின நாவல் மூணு வருஷமா தூங்கிக்கிட்டிருக்கு. உலகத்துல யாருமே எந்த மொழியிலயும் நாவலை இவ்வளவு சுருக்கமா எழுதி இருக்கமாட்டாங்க:)  
அதிகாலைப் பதிவுக்கு நன்றி-ன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்! ஆனா பதிவு போடலைன்னா அக்காவை மிரட்டி இருப்பேன்-ன்னு மட்டும் பணிவுடன் சொல்லிக்கறேன்! :)

//எனக்கு பெற்றோர் வைத்த பெயர் மஞ்சு//

மஞ்சு = மேகம்!
இப்போ புரியுது உங்க கருணை மனசு!

//சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாயகியின் பெயர் மதுமிதா//

ஆனந்த தாண்டவம் படத்தில் தமன்னா பேரு மதுமிதா-ன்னும் சொல்லலாம்! :))  
//அழுகை என்பது மரத்துப்போயிருக்க வேண்டும். வாழ்க்கை அப்படித்தானே இருக்கிறது//

உம்ம்ம்ம்
மரத்துப் போனாலும் ஒரு மழையில் துளிர் விடும்! :)

//வத்தக்குழம்பு, கறி, பொரியல்//

அடுத்த தபா வீட்டுல ஆஜர்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! :)

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
ரொம்ப பெர்பெக்ஷன்//

ஹா ஹா ஹா!
நல்லதுக்கு காலமில்லை-க்கா! காலமில்லை! :)))  
//கீழே பக்கத்துவீட்டில் அடிபம்பு அடிக்கும் ஓசை//

உம்...வாடகை வீட்டில் இருந்த போது தண்ணீர் பஞ்ச காலம், சென்னையில்! அப்போ அம்மா 4:00 மணிக்கு எழுப்பி விடுவாங்க! அரை மணில இருவது வாளி நிரப்பணும்! மாடி வீடு வேற! மேல ஏறவே ஏறாது!

வாஷர் காத்து எல்லாம் வரும் சத்தம்! கூடவே முஸ்தபா முஸ்தபா, டோன்ட் வொரி முஸ்தபா-ன்னு பாட்டு பாடிக்கிட்டே அடி பம்பு அடிச்ச காலம் - இப்ப நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க-க்கா! :)

//ஆமாம். ஏன் பேனாவாக மாற்ற வேண்டும்//

பேனா சொன்னதை எழுதும்! இது போல கேள்வி கேக்காது! அதான்! :)

//My Story - Kamaladas//

மலையாள எழுத்தாளர். சிறந்த கவிதாயினி. அவங்க தானே அக்கா? தன்னுள் இஸ்லாமியம் கண்டு மாறினாங்க-ன்னு அவங்க மேலே ஒரே புகாரா கிளப்பி விட்டாங்க! பாவம்!

இவிங்க நாவல் நெய்ப் பாயாசம் மட்டும் வாசிச்சி இருக்கேன்! ஆங்கில மொழிபெயர்ப்பு!  
//நடந்த மனவருத்தம் தரும் நிகழ்வுகளை உடனே சுமப்பதை நிறுத்தி, நினைவில் கொள்ளாது, அடுத்து ஏதேனும் பணி செய்வது. ஆனாலும் அப்படிப்பட்ட நிகழ்வு குறித்து இன்னொருமுறை பேச நேர்கையில் அதே உணர்வுக்கு வந்துவிடுவது//

இப்படி இருக்கக் கூடாது-ன்னு ராகவன் அடிக்கடி என் கிட்ட சொல்லுவான்! இப்போ நீங்களுமா? :)

//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
யோசித்தல்
உள்ளுக்குள் எழும் தொடர்கேள்விகள்//

அப்படின்னா அந்தச் சாத்தான் நல்ல சாத்தான்! :)
கீசு கீசு என்றெங்கும் ஆனை சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே! :)

//உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
பூமி, பிரபஞ்சவெளிப்பாதை:)//

சூப்பரு! பிரபஞ்ச வெளிப்பாதை டூருக்கு நானும் வரேன்-க்கா! என்னையும் அழைத்துச் செல்லுங்க!

பூமி தானே நம்மளை வச்சி தினமும் சுத்துது! நாமளே ஒரு முறை பூமியைச் சுத்தினா என்ன-ன்னு எனக்குப் பல முறை தோனும்! :)
ஆனா அதுக்காக நிலாவாக எல்லாம் மாற முடியாது! :)  
Madhu! superb answers!

thamiz font sariyanathum vandhu innum ezutharen

shylaja  
நல்ல பதில்கள் சகோதரி !!!  
மது! கலக்கிட்டீங்க!  
ஷைலு எப்படி இருக்கிறீங்க? நலம்தானே? பெங்களூரு வரும்போது சந்திக்கலாம் ஷைலு.

ஆனா நான் மை.பா சாப்பிடறதில்ல:)  
/// எம்.ரிஷான் ஷெரீப் said...
நல்ல பதில்கள் சகோதரி !!!///

நன்றி ரிஷான். நலம்தானே.  
ரவி ரொம்ப நாளா வரமுடியல. அதனால் உடனே இங்கே எழுத முடிய‌ல. எப்படி இருக்கிறீங்க.

வாங்க நாம ஒருநாளு பூமியைச் சுத்தலாம்:)  

Post a Comment